Mon-Sat : 7:00AM - 09:00PM
Sun : 7:00AM to 12:00Noon

மாதவிடாயும் மனநலமும்..

மாதவிடாயும் மனநலமும்.. - Dr. Ramya Sampath, MD DNB (Psy.) - Consultant Psychiatrist, Chennai

பெண்கள் ஆண்களுக்கு நிகராக அலுவலகங்களிலும் வெளியிடங்களிலும் அவர்களுக்கே உரித்தான முத்திரை பதிக்கிறார்கள். மாதசுழற்சியும் , அதையொட்டிய நாட்களில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனரீதியான மாற்றங்களை குறித்தே நாம் அரியவிருக்கிறோம் . சமீபத்தில், ஒரு புதுமணத் தம்பதிகளை சந்தித்தேன் . மனைவியின் சுபாவத்தில் சில நாட்கள் வித்தியாசத்தை உணர்வதாக கூறினார் அவர் . சில வாரங்கள் , அவள் மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் , சில நாட்கள் அதிக கோபம் , வாக்குவாதங்கள் , அழுகை என இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் . இதன் பின்னனியில் , அவர்களுகிடையே மனவிரிசல்களோ சிக்கல்களோ இல்லை என்பதை ஒரு மனநலமருத்துவராக உறுதிசெய்த பிறகு , இந்த சுபாவ வித்தியாசத்திற்கான மருத்துவ பின்னனியை அவர்களுக்கு சொல்ல ஆரம்பித்தேன். உடல் ரீதியாக , பெண்களுக்கு ஹார்மோன்களின் தாக்கம் அதிகம். பூப்படையும் சமயம் தொட்டு மாதவிடாய் நிற்கும் சமயம் வரை ஒரு முப்பது நாற்பது வருடங்கள் பெண்கள் பல உடல்ரீதியான மாற்றங்களை சந்திக்கிறார்கள் . தோராயமாக எழுபது சதவிகித பெண்கள் ‘PMS’ எனப்படும் “Pre-Menstrual Syndrome” அவர்களுக்கு ஏற்படுவதாக கூறுகிறார்கள் .
ஹார்மோன்கள் நம் உடலின் இயக்கத்தையும் , மனதின் தன்மையையும் மாற்ற வல்லவை என்பதை நாம் உணர வேண்டும். மாதவிலக்கு முடிந்தவுடன் தொடரும் முதல் இரண்டு வாரங்கள்,, பெண்கள் ‘Oestrogen’ எனப்படும் ஹார்மோனின் தாக்கத்தில் இருக்கிறார்கள் . இந்த phase- இல் பெண்களுக்கு அதிக உற்சாகமும் ஆர்வமும் ஏற்படும் . அடித்தள்ளுபடியில் shopping செய்வதில் இருந்து , வீட்டு வேலைகளை பம்பரமாய் சுழன்று செய்வது வரை அனைத்தையும் உற்சாகத்துடன் செய்து முடிப்பார்கள் . புதிய ஆக்கபூர்வமான சிந்தனைகள் ஏற்படும் . குடும்பத்தில் உறவுநிலைகளை கச்சிதமாக சகிப்புத்தன்மையுடன் அணுகுவார்கள்.

Pre-Menstrual Syndrome என்றால் என்ன ?

மாதவிடாய் தொடங்குவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பல பெண்கள் உடல் ரீதியாகவும் , மனரீதியாகவும் , மாற்றங்களை உணர்கிறார்கள். வயிறு உப்புவது , மார்பகங்கள் கனத்து போவது போன்ற உணர்வு , அஜீரண கோளாறுகள் , உயிர் உறுப்புகளில் வலி , உடல் அசதி , தலை வலி போன்ற உபாதைகள் ஏற்படும் .
மனதளவிலும் பெண்கள் பல உளைச்சல்களை உணர்வதுண்டு . யாரைப் பார்த்தாலும் எரிந்து விழுவது , காரணமில்லாமல் அழுகை , வேலையிடங்களில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவது , தனிமையாக உணர்வது , பதற்றம் மற்றும் மனஅழுத்தம் போன்றவை ‘PMS’ இன் அறிகுறிகளே ! பசியின்மை , தூக்கமின்மை , நமக்கு பிடித்த விஷயங்களைக் கூட செய்வதற்கு ஆர்வமில்லாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டதுண்டா ?
‘PMS’ அறிகுறிகள் மாதவிடாய் தொடங்குவதற்கு முன் தொடங்கி , ரத்தப்போக்கு தொடங்கியபின் படிப்படியாக குறையும். எல்லா அறிகுறிகளும் எல்லா பெண்களுக்கும் ஏற்படுவது இல்லை . வயதாக வயதாக இதன் தன்மையும் மாறுபடும் . உணவுப்பழக்கங்களும் வாழ்க்கைமுறையும் இதனுடன் நெருங்கிய தொடர்புடையவை . அதிகமாக எண்ணெய் பதார்த்தங்களை உண்பது , உடல் பருமன் , ஒரே இடத்தில மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பது , போதிய தூக்கமின்மை , அதிக stress போன்றவை ‘PMS’ வீரியத்தை அதிகரிக்கும்

எனக்கு ‘PMS’ உள்ளதா என்பதை எப்படி அறிவது ?

உங்களுக்கு மேற்கூறிய அறிகுறிகள் எப்போது ஏற்படுகிறது என்பதை ஒரு டைரியிலோ , நாள்காட்டியிலோ குறித்துவையுங்கள் . மனதளவில் ஏற்படும் மாற்றங்களை நடுநிலையாக ஒரு மூன்றாவது நபராக இருந்து கவனியுங்கள் . உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை பட்டியலிடுங்கள் . “PMS” என்பது நான்கில் மூன்று பெண்களுக்கு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன . இதன் தாக்கம் குறைவாக இருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை . நூறில் ஐந்து பெண்களுக்கு ‘PMS’-இன் தன்மை மிகவும் அதிகமாகி அவர்களுடைய வாழ்க்கையில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும் . அப்படி இருந்தால் , அது “Pre Menstrual Dysphoric Disorder“ (PMDD) என சொல்லக்கூடிய மனநலம் சார்ந்த கோளாறாக இருக்கலாம் . அதற்கு நீங்கள் ஒரு மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது மிக முக்கியம்.

‘PMS’ ஐ எப்படி சமாளிப்பது ?

ஹார்மோன்கள் உங்களுக்கு ஏற்படுத்தும் தாக்கத்தை , உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறைகளை மாற்றி அமைப்பது மூலம் சரிசெய்ய முடியும் . ஒரே நேரம் அதிகமாக உண்பதை விட , அடிக்கடி , அளவாக சாப்பிடுவது நல்லது .மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன் சில நாட்கள் , பொறித்த உணவு வகைகள் , அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட processed food போன்றவற்றை குறைத்தால் , வயிறு உப்புவது , மார்பகங்கள் கணப்பது போன்றவற்றை தவிர்க்கலாம் .நார்சத்து அதிகம் உள்ள காய்க்கறிகள் , பழவகைகள் , சிறுதானியம் உள்ள உணவுவகைகள் அதிகமாக உண்ணவேண்டும் ..காபி , டீ, cool drinks போன்றவற்றை தவிர்க்கலாம் .
ஒரு நாளில் முப்பது நிமிடமாவது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் . அது நடைபயிற்சியாகவோ , நடனமாகவோ ,cycling, swimming போன்ற உங்களுக்கு முடிந்த விருப்பமுள்ள எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பொதுவாக மாதவிலக்கு நாட்களில் உடற்பயிற்சியை பலர் நிறுத்திவிடுவோம் . ஆனால் , மிதமான உடற்பயிற்சி ‘PMS’- ஐ குறைப்பது மட்டுமின்றி தாளாத வலியை ஏற்படுத்தும் menstrual cramps-ஐயும் குறைக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை .
பகலில் எத்தனை தூங்கினாலும் , அது இரவு தூக்கத்திற்கு ஈடாகாது . தூங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன் gadgets-ஐ (smartphones, laptop)தவிர்த்து புத்தகம் படிப்பது , குடும்பத்தினருடன் பேசி மகிழ்வது என மனதை relaxஆக வைத்துக்கொண்டால் உறக்கத்தின் தரம் மேம்படும் .
நினைவிருக்கட்டும் ! ‘PMS’ ஒரு நோயல்ல . அதை நோயாக மாற்றாமல் இருப்பது, உங்கள் கையில் தான் இருக்கிறது .நம் உடலும் மனமும் இயங்கும் விதத்தை நாம் புரிந்துகொண்டால் , எல்லாம் நலமே . மீண்டும் சந்திப்போம் !


Credits : Dr Ramya Sampath
Consultant Psychiatrist
Capstone Clinic